உலகம் நம் கையில்

   
 
  welcome to palnilavu.com
தங்கள் பிரதேசத்தில் நிகழும் நிகழ்வுகள் மற்றும் பொது அறிவு , மருத்துவம் போன்ற பயனுள்ள தகவல்களை எமக்கு அறியத்தரவும். தொடர்பு கொள்ளவேண்டிய ஈமெயில் முகவரி director@palnilavu.com
 
         
 

பால்நிலவு செய்திகள்

     
  welcome to palnilavu.com advertisement
    யாழ்க் குடாநாட்டு மக்களுக்கான டெங்கு காய்ச்சல் பரம்பல் எச்சரிக்கை
  [ திங்கட்கிழமை ஆகஸ்ட் 03.08.2009 ]
யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் பரவாது கட்டுப்படுத்த உதவுமாறு யாழ்க் குடாநாட்டு மக்களிடம் யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

 

இலங்கையின் பல மாவட்டங்களிலும் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவியுள்ளது. இலங்கையில் இவ்வருடம் இதுவரை 170 பேர் டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்துள்ளதுடன் 16,179 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். யாழ் மாவட்டத்தில் தற்போதுவரை இந்நோயின் தாக்கம் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே உள்ளது. யாழ் மாவட்டத்தில் இதுவரை 09 பேர் மட்டுமே இவ்வருடம் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயைப் பரப்பும் நுளம்புகள் பரவலாகக் காணப்படுகின்றன. தற்போது நாட்டில் சுமுகநிலை ஏற்பட்டமையால் தென்பகுதியிலிருந்து தினமும் யாழ் மாவட்டத்திற்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இங்கு வருவோரில் ஒருவர் டெங்கு நோய்க்கிருமியுடன் வருகை தந்தால் இங்கும் இந்நோய் வேகமாகப் பரவி பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புக்கள் உள்ளன.

எனவே டெங்கு நோயின் பரம்பலை யாழ் மாவட்டத்தில் தடுக்க வேண்டுமாயின் இந்நோயைப் பரப்பும் நுளம்புகளை கட்டுப்படுத்த வேண்டும். டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்களை பொதுமக்கள் தத்தமது வீடுகளிலும், சுற்றாடலிலும் அழிக்க வேண்டும். பாடசாலைகளில், நிறுவனங்களில், பொது இடங்களில் சிரமதானம் மூலம் இவை அழிக்கப்பட வேண்டும்.

தற்போது யாழ் மாவட்டத்தில் மலேரியா தடை இயக்கத்தைச் சேர்ந்த பொது சுகாதார வெளிக்கள உத்தியோகத்தர்களும் ஏனைய களப் பணியாளர்களும் வீடு வீடாகச் சென்று வீட்டு சுற்றாடலைப் பார்வையிட்டு இது சம்பந்தமான ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். அவர்களது ஆலோசனைப்படி நடந்து ஒத்துழைப்பு வழங்கி டெங்கு நோயை கட்டுப்படுத்த உதவுமாறு வேண்டுகின்றோம்.

இதேவேளை டெங்கு நோயைப் பரப்பும் நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்த தவறுபவர்கட்கு எதிராக கடும் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இச்சட்டத்தின் கீழ் கூடுதலான அபராதமும், சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம். பல மாவட்டங்களில் இச்சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் யாழ் மாவட்டத்தில் இச்சட்ட நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க விரும்பவில்லை. பொதுமக்களின் ஒத்துழைப்புடனேயே நுளம்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னேடுக்க விரும்புகின்றோம். ஆனால் இதற்கு யாராவது ஒத்துழைக்க மறுத்தால் சில தனி நபர்களின் தவறுகளால் ஒரு சமூகம் பாதிக்கப்படுவதை நாம் அனுமதிக்க முடியாது. அவர்கட்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என்பதை தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.

சட்டத்திலுள்ள பிரதான முக்கிய அம்சங்கள்

  1. சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கான அதிகாரம் அந்தப்பகுதியின் சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  2. நுளம்பினால் பரவும் நோய்களைத் தடுப்பதற்கும் இல்லாது ஒழிப்பதற்கும் பின்வரும் கடமைகளை வீட்டு / வளவு உரிமையாளர் / குடியிருப்பாளர் மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
  3.  

    • திறந்த நிலையிலுள்ள தகர டப்பாக்கள், போத்தல்கள், தேங்காய் சிரட்டைகள், கோம்பைகள், ரயர்கள் மற்றும் நீர் தேங்கி நிற்கக்கூடிய சகல கொள்கலன்களும் அகற்றப்பட்டு / அழிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
    • நீர் வழிந்தோடும் பீலிகள் மற்றும் வாய்க்கால்கள் போன்றவை நீர் தடையின்றி ஓடும் வகையில் பேணப்படல் வேண்டும்.
    • நீர்த்தாங்கிகள், தொட்டிகள் மற்றும் குளிரூட்டி ( A/C ) ஒழுங்கான முறையில் சீரமைக்கப்பட்டு நுளம்புகள் உட்புகுந்து பெருகாதவாறு பேணப்படல் வேண்டும்.
    • கிணறுகள் மற்றும் கிணற்றுச் சுற்றாடல் சீராக்கப்பட்டு நுளம்புப் பெருக்கம் ஏற்படாதவாறு பேணப்படல் வேண்டும்.
    • நீச்சல் /  நீர் தொட்டிகள் கிழமைக்கு ஒரு தடவையாவது வெறுமையாக்கப்பட்டு துப்பரவு செய்யப்படல் வேண்டும்.
    • வீட்டு வளவினுள் / காணியினுள் தேங்கும் நீர், நுளம்புகள் பெருகாதவாறு கிரமமான முறையில் அகற்றப்படல் வேண்டும்.
    • செடிகள், புதர்கள் மற்றும் நீர் தேங்கி நிற்க ஏதுவான சகல தாவரங்களும், மற்றும் அலங்காரத்திற்காக வீடுகளினுள் அல்லது வெளியில் பூங்கன்று வளர்க்கப்படும் பூச்சாடிகள் நுளம்புகள் பெருகுவதற்கு வாய்ப்பானவை. இவை நுளம்புகளின் பெருக்கத்திற்கு இடமளியாதவாறு பேணப்படல் வேண்டும். இல்லாவிடில் இவை அகற்றப்படல் வேண்டும்.
    • நீர் நிலைகளில் நீர்த்தாவரங்கள் / நீர்க்களைகள் / பாசிகள் இல்லாதவாறு பேணப்படல் வேண்டும்.

     

  4. வளவுகள் அல்லது அவற்றினுள் காணப்படும்; அல்லது பேணப்படும் எதுவும் நுளம்புப் பெருக்கத்திற்கு சாதகமானதென தகுதி வாய்ந்த அதிகாரிக்கு தோன்றுமிடத்து அவர் எழுத்து மூலமான அறிவித்தல் மூலம் குறித்த காலப்பகுதியினுள் திருத்தங்களை செய்யுமாறு சொந்தகாரருக்கு அல்லது குடியிருப்பாளருக்கு பணிக்கப்படுதம்.
  5. நுளம்பு பெருக்கத்திற்கு சாதகமான நிலைமைகளை வைத்திருக்கும், இந்நிலைமைகளை இல்லாதொழிக்க தேவையான குறித்த நடவடிக்கைகளை மற்றும் மேற்கொள்ளாது இருக்கும் சொந்தக்கார் அல்லது குடியிருப்பாளர் இச்சட்டத்தின் கீழ் குற்றவாளியாவார்.
  6. நீதிமன்றத்தினால் குற்றவாளியாக காணப்படுமிடத்து ஆயிரம் ரூபாவிற்குக் குறையாததும் இருபத்தையாயிரம் ரூபாவிற்கு மேற்படாததுமான குற்றப்பணத்திற்கும் மேலும் தவறு தொடர்ந்து புரியப்படுமிடத்து குற்றத்தீர்ப்பின் பின்னர் இத்தகைய தவறு தொடர்ந்து புரியப்படுமாயின் ஒவ்வொரு மேலதிக நாளுக்கும் நூறு ரூபா குற்றப்பணத்திற்கும் ஆளாதல் வேண்டும்.


மேற்குறித்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்கி யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் பரவாது கட்டுப்படுத்த உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

வைத்தியகலாநிதி ஆ.கேதீஸ்வரன்,
பிராந்திய பணிப்பாளர்,
சுகாதார சேவைகள்,
யாழ்ப்பாணம்.

 

     
    welcome to palnilavu.com
   யாழ்க் குடாநாட்டு மக்களுக்கான
    டெங்கு காய்ச்சல் பரம்பல் எச்சரிக்கை
   யாழ்க் குடாநாட்டு மக்களுக்கான
    அவசர தேவை அம்புலன்ஸ்
 
 
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
         
  பால்நிலவு.கொம் முகப்புப் பக்கம் செல்க